சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிடத் தொழிலாளியான முத்து மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் முத்து மாரியப்பன் கடந்த 8-ந் தேதி சிறுமியை திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணம் குறித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் இந்திராவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து இந்திரா அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துமாரியப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.