சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து இரு வீட்டாரும் இவர்களது திருமணத்தை ஏற்று கொள்ளாததால் சிறுமி மற்றும் கார்த்திக் இருவரும் வாடகை வீட்டில் குடியிருந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் சிறுமி 9 மாத கர்ப்பிணியானார். இதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் போது மருத்துவர் சிறுமிக்கு 17 வயது என்பதால் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின்படி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.