போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேருந்து நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அலுவலகத்திற்கும், மளிகை, ஜவுளி. நகை, பாத்திரக்கடைகள், கோவில் போன்றவற்றிற்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வருவதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கின்றது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக காவல்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனையடுத்து தற்போது வெளியூர்களில் இருந்து திருப்பத்தூருக்கும், திருப்பத்தூரிலிருந்து வெளியூருக்கு தினசரி 250 பேருந்துகள் வந்து செல்கின்றது.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள் கிருஷ்ணகிரி மெயின் ரோடு மற்றும் வாணியம்பாடி மெயின்ரோடு பகுதிகளில் ஆங்காங்கே பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்படுகிறது. இந்தப் பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படும்போது வழி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது. ஆகவே போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி புதுப்பேட்டை பேருந்து நிலையம், கிருஷ்ணகிரி மெயின் ரோடு, மீனாட்சி தியேட்டர், ஸ்டேட் வங்கி, நியூ சினிமா தியேட்டர், தூய நெஞ்சக் கல்லூரி பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியபோது திருப்பத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து துறை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் போக்குவரத்து மிகவும் பாதிப்படைகின்றது. ஆகையால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கினால் நெரிசல் குறையும் என்பது குறித்து ஆய்வு செய்து, அந்தப் பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி அதற்குள் பேருந்துகள் சென்று பயணிகளை ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் பெருமாள்முருகன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் அவருடன் இருந்தனர்