போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகர பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்படி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவல்துறையினர் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி வேலூர் அண்ணாசாலை, ஆற்காடு சாலை போன்ற பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் சாரதி மாளிகை பகுதிகளில் வாகனங்கள் வரிசையாக நிற்கும் வகையில் சாலையில் கயிறு கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கூறியபோது வேலூர் மாநகரில் சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்து போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த முறை வெற்றிகரமாக அமைந்தால் அடுத்த கட்டமாக ஹெல்மெட் அணியாதவர்கள், சீட்பெல்ட் அணியாதவர்கள், போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் செல்பவர்கள் போன்றோரை சி.சி.டி.வி. கேமராவின் மூலமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட் இருப்பதாக உதவி போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாநகர் பகுதியில் உள்ள 300 சி.சி.டி.வி. கேமராக்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வேலூர் சாரதி மாளிகை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவது ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இனிவரும் நாட்களில் சிக்னலில் நேரத்தை ஒழுங்குபடுத்துவது, வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்வது குறித்து நடவடிக்கை எடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.