புதுச்சேரிக்கு 5 அரசு பேருந்துகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்குட்பட்ட , திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் சென்னை, விழுப்புரம், திருச்சி போன்ற பல மாவட்டங்களுக்கு 300-க்கும் மேல் உள்ள அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றது. அதேபோன்று 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு 222 டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 1- ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டது. எனவே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு கடந்த 5-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதனால் தளர்வின்படி இன்று (திங்கட்கிழமை) முதல் புதுச்சேரிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி வேலூரில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு 3 அரசு பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 பேருந்தும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருப்பத்தூரில் இருந்து புதுச்சேரிக்கு 1 பேருந்தும் இயக்கப்படுகிறது. இவ்வாறு இந்த 5 பேருந்துகளும் ஏற்கனவே சென்ற நேரத்தில் புறப்படும் என்று போக்குவரத்துக்கழக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.