போலி மது பாட்டில் தயாரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலையாண்டிபட்டினம் பகுதியில் கருமலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 202 மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உடுமலை காவல்துறையினர் கருமலையப்பன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் மூடி திறந்திருந்த 4 பாட்டில்களில் மதுவுக்கு பதிலாக கூடுதல் போதைக்காக நெடி மிகுந்த திரவம் கலந்து வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கருமலையப்பனை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.