சர்க்கரை நோய்க்கு போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பிடாரிகுளம் சாலை பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் சித்தா முறையில் சர்க்கரை நோய்க்காக மருந்து தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் வசிக்கும் பக்கிரிசாமி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வேலை பார்த்துள்ளார். அதன்பின் வேலையிலிருந்து நின்ற பிறகு பக்கிரிசாமி ரவிக்குமார் நிறுவனப் பெயரை பயன்படுத்தி சர்க்கரை நோய்க்கான மருந்து போலியாக தயாரித்து வெளிமாநில முகவரியை அச்சிட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனை அறிந்த ரவிக்குமார் இதுகுறித்து கும்பகோணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பக்கிரிசாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் நின்று கொண்டிருந்த பக்கிரிசாமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.