சட்டவிரோதமாக போலி பணி நியமன ஆணையை தயார் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்தசாரதி என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் பார்த்தசாரதியிடம் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட அரவிந்த் 5 லட்சம் ரூபாயை தனக்கு கொடுத்தால் உடனடியாக வேலை வாங்கி தருவதாக பார்த்தசாரதியிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதனை நம்பிய பார்த்தசாரதி 5 லட்சம் ரூபாய் பணத்தை அரவிந்திடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் போலி பணி நியமன ஆணையை தயார்செய்து பார்த்தசாரதியிடம் வழங்கியுள்ளார்.
அதன்பின் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் பணி நியமன ஆணையை அரவிந்த் கொடுத்தபோது அதிகாரிகள் இது போலியான பணி நியமனஆணை என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பார்த்தசாரதி போலி நியமன ஆணை வழங்கிய அரவிந்த் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அரவிந்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.