Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாதவருக்கு… கிடைத்த ஆசிரியர் பணி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(52). இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளதாக சான்றிதழ் கொடுத்து கடந்த 1999ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர்  மிட்ட அள்ளி புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக 2019ஆம் ஆண்டு மாதேஸ்வரன்  என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார்.

மனுவின் அடிப்படையில் கிருஷ்ணகிரி முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வட்டார  கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராஜேந்திரன் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்று தெரிய வந்தது. மேலும் போலியாக பத்தாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்து 21 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி வந்த விஷயம் தெரியவந்தது.

இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தகவலறிந்த ராஜேந்திரன் தலைமறைவானார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை தேடிவந்தனர். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பிறகு காவேரிப்பட்டினம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்த அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |