போலியான கொரோனா சான்று தயார் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் பிற மாநிலங்களுக்கு இன்னும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமானால் கொரோனா சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அதன்படி தமிழக-கேரள எல்லையான புளியரையில் வருமான வரித்துறை சோதனைச் சாவடி தவிர சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு சோதனைச் சாவடி இயங்கி வருகின்றது.
இந்நிலையில் கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே பயணம் செய்யும் வாகனங்களை இந்த சோதனைச் சாவடியில் நிறுத்தி சோதனை செய்கின்றனர். அவ்வாறு நேற்று நடைபெற்ற சோதனையில் 4 நபர்கள் போலியான கொரோனா சான்று வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நான்கு நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்த தகவலில் புளியரை பகுதியில் வசிக்கும் சரவணன் மகேஷ் என்ற இளைஞர் கேரளா செல்பவர்களுக்கு போலியான கொரோனா சான்று தயார் செய்து கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சரவணன மகேஷை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.