கடலூர் அருகே முன்பகை காரணமாக 70 வயது முதியவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற தந்தை மகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியில் விவசாய தொழில் செய்து வருபவர் அய்யாக்கண்ணு. இவருக்கும் இவரது உறவினரான மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது முன்பகையாக மாறிப்போக இருவரும் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டனர். இந்நிலையில் நேற்று அய்யாக்கண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அவரது உறவினர் தனது மகனுடன் சேர்ந்து 75 வயது முதியவரான அய்யாகண்ணுவை உருட்டு கட்டையால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட தலைமறைவான தந்தை மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.