Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்ல வேலை பார்க்க வாரேன்… 3 வயது குழந்தையை அலேக்காக தூக்கிய பெண் கைது..!!

பல்லடம் அருகே 3 வயது குழந்தையை கடத்திய இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சுடலைராஜன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்பு அவரது மனைவி, சுடலைராஜனை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார். இதனால், சுடலை ராஜன் தனது இரண்டு வயது குழந்தையை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தார்.

மாரியப்பன் கடந்த 24 ஆம் தேதி காப்பகத்திலிருந்து குழந்தையை பழனி கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கோயிலிலிருந்து திரும்பி வரும்போது மாரியப்பன் குழந்தையோடு சேர்த்து அறிமுகமில்லாத 23 வயது இளம்பெண்ணை தன்னுடன் அழைத்துவந்தார். வீட்டு வேலை, குழந்தையை கவனிப்பதற்காக அழைத்து வந்ததாக சுடலை ராஜனிடம் மாரியப்பன் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி மாலை வீட்டிலிருந்த குழந்தை, அந்த பெண் இருவரும் மாயமாகினர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் சுடலை ராஜன் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்றிரவு ஈரோடு பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் சுற்றித் திரிந்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், குழந்தையை கடத்தி சென்ற இளம்பெண் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் மேரி என்பதும் உறவினர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் வசித்துவருவதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குழந்தை வியாபார நோக்கத்திற்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் கடத்தப்படவில்லை. தனிமையான சூழலில் வசித்து வந்த அந்த பெண் ரயில் மற்றும் பேருந்துகளில் குழந்தையைக் காட்டி இலவசமாக பயணம் செய்ய தூக்கிச்சென்றதாக தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்” என்றார்.

Categories

Tech |