பெரம்பலூர் அருகே பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் துறையூர் தாலுகா பெருமாள்பாளையம் நாயுடு தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் சேலம் மாவட்டத்தில் பிளம்பர் வேலைபார்த்து வருகின்றார். இவருக்கு 40 வயதில் சங்கீதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 22 வயதில் யுவனேஷ் என்ற மகனும், 19 வயதில் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். கண்ணனின் குடும்பத்தினர் லாடபுரத்தில் மயிலூற்று அருவி சாலையிலுள்ள கண்ணுக்குழி என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சங்கீதா நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு, இரவு நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.. இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் மற்றும் மகள் இருவரும் அவரை வெளியே பல இடங்களில் தேடினர். அப்போது கண்ணுக்குழி வெள்ளிவாரியில் இருக்கும் ஒரு புங்கை மரத்தில் கயிற்றால் சங்கீதா தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கண்ணனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து லாடபுரம் கண்ணுக்குழிக்கு வந்த கண்ணன் பெரம்பலூர் காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து புகாரளித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை நேற்று வழக்குப்பதிவு செய்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.