புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 600 காவல்துறையினர் ஈடுபட இருப்பதாக காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது பரவி வருகின்ற உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காகவும் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதலால் பொது இடங்களில் புத்தாண்டுப் பண்டிகையை கொண்டாட அனுமதி இல்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் இதர சாலைகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மாவட்ட காவல்துறையின் சார்பாக புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பின்னர் வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றை கண்காணிக்க காவல்துறையினர் ரோந்துப் பணி மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதற்குப் பிறகு நெடுஞ்சாலைகளில் குற்றங்களை தடுக்க ரோந்து வாகனங்கள் மூலமாக கண்காணிக்கப்படும் எனவும், புத்தாண்டு அன்று மது அருந்திவிட்டு போதையில் வாகனங்கள் ஓட்டுவது மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதும், அதிவேகமாக வாகனம் ஓட்டுவது ஆகியவற்றை தடுக்க மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படும். மேலும் இம்மாவட்டம் முழுவதுமாக பாதுகாப்பிற்காக 600 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.