பெரியகுளம் அருகே கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கீழவடகரை ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம் (30).. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் கவுசல்யா.. இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் கல்யாணம் நடந்தது. இந்நிலையில் கவுசல்யா கடந்த 4ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கவுசல்யாவின் பெற்றோர் தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெரியகுளம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.. அதேசமயம் பெரியகுளம் ஆர்.டி.ஓ. சினேகாவும் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்தநிலையில் கவுசல்யாவின் கணவர் கவுதமை சந்தேகத்தில் பிடித்து பெரியகுளம் காவல் துறையினர் துருவி துருவி விசாரித்தனர்.. அப்போது அவர் உண்மையை போட்டு உடைத்தார்.
அதாவது, கவுசல்யாவிடம் வரதட்சணை கேட்டு கணவர் கவுதம் மற்றும் மாமியார் சாந்தி ஆகிய இருவரும் அடித்து கொலை செய்துவிட்டு, பின் அதனை மறைத்து, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நம்ப வைக்க கவுசல்யாவின் உடலை தூக்கில் தொங்க விட்டது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து கவுதமை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் சாந்தியை வலைவீசி தேடி வருகின்றனர். வரதட்சணைக்காக மனைவியை கணவர் மற்றும் மாமியார் அடித்துகொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.