சென்னை ஆவடி அருகே உள்ள கண்ணம்பாளையம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா. கனவனை இழந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மல்லிகாவைக் காண்பதற்காக அவரது உறவினரான மீனாட்சி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் உள்ளே சென்ற மீனாட்சி, சமையலறையில் மல்லிகா சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து ஆவடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மல்லிகா தலையில் காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், மல்லிகா அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருப்பதையும் கண்டறிந்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் மல்லிகாவை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை கண்டறிய, தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும் கண்ணம்பாளையம் சுற்றுவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக வீடுகள் கட்டி வருவதால், அங்கு வேலைக்கு வந்தவர்கள், மல்லிகா தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு, அவர் அணிந்திருக்கும் நகைக்காக கொலை செய்து இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.