தண்ணீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து 4 பேர் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை காவல்துறையினர் பூண்டி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி பார்த்த போது அதில் சாராயம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வரிஞ்சிபாக்கம் கிராமத்தில் வசிக்கும் வேல்முருகன், மணிகண்டன், பெரியண்ணா மற்றும் மணிமாறன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் தண்ணீர் பாட்டிலில் சாராயத்தை அடைத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 150 பாட்டில் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.