17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குற்றத்திற்காக தாய், தந்தை உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல மாந்தை பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்பின் அனைத்து மகளிர் காவல்துறையினர் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் என மொத்தம் 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து விட்டனர்.