வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த கணவன் மனைவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் பிரபு குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்களின் வீட்டு பூட்டை உடைத்து ஆணும், பெண்ணும் உள்ளே சென்றுள்ளனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தப்பியோட முயற்சி செய்த இரண்டு பேரையும் மடக்கி பிடித்து விட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் கடம்பத்தூர் பகுதியில் வசிக்கும் கருணா மற்றும் சௌமியா தம்பதிகள் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் பிரபு குமாரின் வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சி செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றது. அதன் பின் கணவன் மனைவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.