விருதுநகர் மாவட்டத்தில் லாரியை திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மதுரை செல்லும் சாலையில் மகேஸ்வரன் என்பவர் லாரி போக்குவரத்து அலுவலகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி இவருக்கு சொந்தமான லாரியை அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த லாரியை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரன் விருதுநகர் வடக்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து துணை சூப்பிரண்டு அதிகாரியாக நாகசங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து திருடு போன லாரியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த லாரி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள பணிமனையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஷேக் செய்யதுஅலி, அப்துல் ஹாசிம், முகமது நசீம் ஆகிய 3 பேர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்து விசாரித்ததில் அவர்கள் பல்வேறு இடங்களில் இதுபோன்ற லாரிகளை திருடி அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 2 லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.