பெண் போலீஸ்காரரை கணவர் குக்கர் மூடியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக தமிழ்ச்செல்வி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாமியப்பன் என்ற கணவர் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்ச்செல்வி தனது கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை மற்றும் மகள்களுடன் அரண்மனை புதூர் பகுதியில் வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வியின் மூத்த மகளின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சாமியப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபமடைந்த சாமியப்பன் வீட்டின் சமையலறையில் இருந்த குக்கர் மூடியை எடுத்து தமிழ்ச்செல்வியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சாமியப்பனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.