கோவை மாநகர காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருக்கும்போது கேமராவை தங்களது சீருடையுடன் இணைத்து அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வியாபாரிகள் அடித்து கொடூரமாக காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அதேபோல் பொதுமக்களுடன் காவல்துறை அதிகாரிகள் நல்லுறவை பேண வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பல மாவட்ட காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மாநகரில் வாகன தணிக்கையில், ஈடுபடும் போது உயர் அதிகாரிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அவர்கள் பணியில் இருக்கும்போது கண்காணிப்பு கேமராவை தங்களது சீருடையுடன் இணைத்து அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் பொதுமக்கள் ஆக இருக்கட்டும், காவல்துறை அதிகாரிகளாக இருக்கட்டும் தவறு செய்தால் வீடியோ ஆதாரத்துடன் அவர்களின் குற்றம் நிரூபிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கண்காணிப்பு கேமரா செயல்பாட்டில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு பொது மக்களாக இருந்தாலும்சரி, காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் சரி அனாவசியமாக பேசாமல் ஜாக்கிரதையாக மரியாதையுடன் நடந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.