வெடி மருந்து விற்பனை கிடங்குகளில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல தட்டப்பாறை, கீழ் தட்டப்பாறை மற்றும் தெய்வசெயல்புரம் போன்ற பகுதிகளில் கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கிடங்குகளை சோதனை செய்துள்ளார்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் கூறும்போது, கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே வெடிமருந்து பயன்படுத்த வேண்டும் எனவும், உரிய சான்றுகளோடு வருபவர்களுக்கு மட்டுமே வெடிமருந்தை விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து கல்குவாரி மற்றும் கிணறுகளில் பணியாற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், பயன்படுத்தி பின் மீதமுள்ள வெடிமருந்துகளை அவர்களிடமிருந்து மீண்டும் பெற்று பாதுகாப்பான முறையில் கிடங்கில் வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வெடி மருந்து விற்பனை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் வெடிமருந்து கிடங்குகளை பராமரித்து பாதுகாப்பாக கையாள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.