மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் ஏட்டு உயிரிழந்த நிலையில், மற்றொரு காவல் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போதை பொருள் தடுப்பு குற்றப்பிரிவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் தன்னுடன் வேலை பார்க்கும் காவல் அதிகாரி சிவகுமார் என்பவருடன் செஞ்சேரி மலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின் இருவரும் பணி முடித்து விட்டு இரவு நேரத்தில் மீண்டும் கோவைக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டம்பட்டி லட்சுமி நகர் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் இருவரும் கீழே விழுந்து விட்டனர்.
இதனால் பலத்த காயமடைந்த சிவகுமார் மற்றும் கண்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவகுமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.