கொல்லிமலை அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டனிநாடு ஊராட்சி கீரக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி நடேசன் என்பவரின் மனைவி தீபா(25). இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் தீபா கடந்த 12ஆம் தேதி எடக்காடு வனப்பகுதிக்கு மாடு மேய்ப்பதற்கு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் தீபா வீடு திரும்பாததால் பயந்துபோன கணவர் நடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் அவரை பல இடங்களில் தேடிவந்தனர். ஆனாலும் தீபா கிடைக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த 13ஆம் தேதி மாலை தீபா எடுக்காடு வனப்பகுதியில் ஆடைகளின்றி நிர்வாணமான முறையில், முகம் சிதைக்கப்பட்டு, உடல் சேலையால் கட்டப்பட்ட நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவரின் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கப்பட்டதற்கான அடையாளமும், காணப்பட்டன. இதனை கண்டு தீபாவின் கணவர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் தீபாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வாழவந்தி நாடு காவல் துறையினர் கொடூரமாக கொலை செய்த நபர் யார் என்று வலைவீசி தேடிவந்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் செல்போன் காணாமல் போனதை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். அந்த செல்போனை கொல்லிமலைப் பகுதியில் ஒருவா் பயன்படுத்தி வருவது தெரியவர, சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவா் குண்டூா் நாடு ஊராட்சி, தென்னக்காடு பகுதியைச் சோ்ந்த 17 வயதுடைய இளைஞர் என்பதும், மாடு மேய்பதற்காக வனப்பகுதிக்கு தீபா தனியாக செல்வதை பாா்த்த அந்த சிறுவன் தகாத உறவுக்கு அழைத்தபோது, அந்த பெண் மறுப்பு தெரிவிக்க வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும் தெரியவந்தது.
அவரை வாழவந்திநாடு காவல்துறையினர் நேற்று கைது செய்தனா்.. 17 வயது சிறுவன் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.