சங்கரன்கோவில் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சின்னகோவிலான்குளம் அருகேயுள்ள சில்லிகுளத்தை சேர்ந்தவர் குட்டிராஜ்.. 58 வயதுடைய இவர் ஒரு விவசாயி ஆவார். இவருடைய மகன் செந்தில்குமார்.. 31 வயதுடைய செந்தில்குமார் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஊரிலுள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வாராம்.. மேலும் ஊரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை கடந்த சில தினங்களுக்கு முன்பு உடைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இவரை பற்றி ஊர்மக்கள் புகாரளிக்க, குட்டிராஜ் மிகுந்த மன வருத்தத்திலும், விரக்தியிலும் இருந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் நேற்று முன்தினம் தன்னுடைய சித்தப்பா சிங்கராஜ் வீட்டிற்கு சென்று அங்கிருந்த பொருட்களை எல்லாம் சேதப்படுத்தியாக சொல்லப்படுகிறது.
இதனையறிந்த குட்டிராஜ் தன் மகனை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது ஊரின் ஒதுக்குப் புறமாக உள்ள கோவிலில் இருந்த செந்தில்குமாரை கண்டதும் குட்டிராஜ் கடுமையாக கண்டித்து, தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அந்தபகுதியினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை செந்தில்குமார் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி சின்னகோவிலான்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குட்டிராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.