சென்னை அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் காணாமல் போவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவந்தது.. இதையடுத்து அம்பத்தூர் காவல் இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி, அம்பத்தூர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார், பட்டாபிராம் மற்றும் கருணாகரசேரி உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்துகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவரிடம் வாகனம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதும் இல்லாதது தெரியவந்தது.. இதையடுத்து, போலீசார் அவரைக் கைது செய்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில், பட்டாபிராம் நவஜீவன் நகர் பகுதியில் வசித்துவரும் நரேஷ் (எ) விக்டர் என்பதும், இவர் குற்ற நிருபர் (crime reporter) என கூறிக்கொண்டு வலம்வந்ததும் தெரியவந்தது. மேலும், டாஸ்மாக், ரயில்வே மற்றும் மால்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை நோட்டம் போட்டு, லாவகமாகத் திருடி அதனை குறைந்த விலைக்கு இவர் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இவரால் விற்கப்பட்ட 13 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த பட்டாபிராம் போலீசார், குற்றவாளியை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.