டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வயதான வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரிக்சிங் என்ற நபர் வீல்சேரில் அங்கு வந்தார். வெள்ளை தாடி, தலையில் தலைப்பாகை மற்றும் கண்ணாடி உடன் காட்சி அளித்துள்ளார். தனக்கு 81 வயது என்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் நடக்க முடியாது என்று கூறி விமான நிலையத்துக்குள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது நடவடிக்கையில் ஏதோ மாற்றம் இருப்பதுபோல் தெரிந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் விமானத்திற்க்காக காத்திருந்த அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டது தெரிந்தது. அவர் முகத்துக்கு நேராக பார்த்து பதிலளிக்கவில்லை. அவரது உடலை பார்க்கும் போது 80 வயது முதியவர் போன்று தெரியவில்லை. அதனால் அவர் மேல் அதிகாரிக்கு மேலும் சந்தேகம் வலுக்கத் தொடங்கியது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் தலைக்கு வெள்ளை டையும், ஒட்டு மீசையும் வைத்திருந்தது தெரியவந்தது.
அவரை போலீசார் பிடித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஜயேஷ் பட்டேல் என்பது தெரியவந்தது. அவர் ஆள்மாறாட்டம் செய்து போலி பாஸ்போர்ட் மூலம் நியூயார்க் செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த தோற்றத்தை பார்க்கும்போது நடிகர் சூர்யா அயன் படத்தில் வயதான தோற்றத்தில் நடிப்பது போல் காட்சி இடம்பெற்றிருக்கும் அதேபோல் இவர் இருந்துள்ளார். இதையடுத்து படேல் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏன் ஆள்மாறாட்டம் செய்து நியூயார்க் செல்ல முயன்றார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.