திருப்பூர் கருவம்பாளையம் தொடக்கப்பள்ளி 2ஆம் வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய குணசேகரன் என்பவருக்கு ராஜேந்திரன் (40) என்ற தம்பி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இருவரும் திருப்பூரில் ஆலாங்காடு பகுதியிலுள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தனர்.
இந்தநிலையில், நேற்று இரவு குணசேகரன் தலையில் இரத்த காயத்துடன் வீட்டுக்குள் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜேந்திரனும் குணசேகரனும் வீட்டில் வைத்து மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த குளவி கல்லால் அண்ணன் குணசேகரனை ஓங்கி அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.