மண்ணச்சநல்லூர் அருகே வங்கி அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் மகன்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள உளுந்தங்குடியை சேர்ந்த வண்ணமணி என்பவருக்கு புகழேந்தி(36) மற்றும் கோவிந்தன்(35) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் புகழேந்தி திருச்சியிலுள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு நிலப்பிரச்சனை காரணமாக உளுந்தங்குடியை சேர்ந்த இரயில்வே காவலர் ரெங்கராஜ் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், வண்ணமணி மற்றும் கோவிந்தன் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் இருவரும் பாச்சூர் பகுதியில் விவசாயம் செய்துவந்தனர். கடந்த 13ஆம் தேதி உளுத்தங்குடியில் இருக்கும் வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர் சதீஷ் என்பவருடன் புகழேந்தி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென கொல்லப்பட்ட ரெங்கராஜின் தம்பி பால்ராஜின் மகன்களான பிரபு, பிரபாகர், துரை மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து புகழேந்தி பைக்கின் மீது காரை வைத்து மோத, நிலை தடுமாறி கீழே விழுந்த புகழேந்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிச் சென்றனர்.
மேலும் இதில் புகழேந்தியின் நண்பர் சதீஷ்குமாரும் படுகாயமடைந்தார். சதீஷ்குமார் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த கொலை தொடர்பாக மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜீயபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் கோகிலா மேற்பார்வையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சமயபுரம் அருகே பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர், பால்ராஜின் மனைவி லட்சுமி(வயது 50), அவருடைய மகன்கள் பிரபு, பிரபாகர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 அரிவாள்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள், திருச்சி ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையிலடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள துரையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.