Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு தெரியாமல்… யுடியூப் பார்த்து காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன்… முடிவில் விபரீதம்!

கும்மிடிப்பூண்டியில் யுடியூப் வீடியோவை பார்த்து காதலன் தனது காதலிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 27 வயதான சவுந்தர் தனியார் கியாஸ் கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகின்றார். அதேபோல கம்மார்பாளையத்தை சேர்ந்த நர்மதா கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் ஜாலியாக இருந்தனர். இதில் நர்மதா கர்ப்பமாகி விட்டார். கர்ப்பமானது பற்றி காதலர்கள் இருவருமே  தங்களது பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நாட்கள் கடந்து நர்மதா 8 மாத கர்ப்பமானார். இதையடுத்து நேற்று மாலை வீட்டில் நர்மதா இருந்தபோது திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன நர்மதா பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதாக நினைத்து, பெற்றோருக்கு தெரியக்கூடாது என்பதற்க்காக காதலன் சவுந்தருக்கு போன் செய்து வலி இருப்பதாக தெரிவித்தார்.அதை தொடர்ந்து வெளியில் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என நினைத்த சவுந்தர் தானே தன் காதலிக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.

அதன்பின் அவர் காதலி நர்மதாவுக்கு போன் செய்து தெரிவித்து ஊருக்கு வெளியே வரவழைத்தார். பின்னர் இருவரும் யாருக்கும் தெரியாமல் கம்மார்பாளையம் அருகே இருக்கும் காப்பு காட்டுக்கு சென்றனர். அங்கே மறைவான இடத்தில் காதலி நர்மதாவை ஒரு இடத்தில் படுக்க வைத்துவிட்டு சவுந்தர் யுடியூப்பில் உள்ள ஒரு பிரசவ வீடியோவை பார்த்தார். அதை தொடர்ந்து, அதில் (வீடியோவில்) உள்ளபடியே நர்மதாவுக்கும் பிரசவம் பார்த்து கொண்டிருந்தார். அப்போது சவுந்தர் தனது கையால் குழந்தையை பிடித்து இழுத்துள்ளார். இதில், குழந்தையின் ஒரு கை மட்டும் துண்டானது.

இதனால் அதிர்ச்சியடைந்து போன சவுந்தர் குழந்தையின் கையை காட்டிலேயே தூக்கி வீசினார். மேலும் காதலிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் குழந்தையை எப்படியாவது வெளியே எடுத்து விட வேண்டும் என்று  நினைத்த சவுந்தர் தொப்புள் கொடியை பிளேடால் அறுக்க முயன்றார்.

இதில் தெரியாமல் நர்மதாவின் குடலில் லேசாக அறுபட்டதாக தெரிகின்றது. இதனால் அவர் வலியால் துடித்து கொண்டிருக்க, அதிக அளவு ரத்த போக்கும் ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையை உணர்ந்த சவுந்தர் பதறிப்போய் காதலி நர்மதாவை தனது பைக்கிலேயே அமர வைத்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு விரைவாக அழைத்து சென்றார்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது நர்மதா ஆபத்தான நிலையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து மருத்துவர்கள் உடனடியாக நர்மதாவை சென்னையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நர்மதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் மூலம் இறந்த நிலையில் ஆண் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி போலீசார் காதலன் சவுந்தரை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். யுடியூப் வீடியோவை பார்த்து காதலன் தனது காதலிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |