சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்திய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் காவல்துறையினர் கொரக்கன் தாங்கள் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் இருக்கும் தக்காளி பெட்டிகளுக்கு நடுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த மினி லாரியில் 9 பெட்டிகளில் 452 மது பாட்டில்கள் இருந்துள்ளது.
இதனை அடுத்து மினி லாரியில் வந்தவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது அவர்கள் வில்லிவலம் கிராமத்தில் வசிக்கும் சத்யராஜ் மற்றும் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் பெங்களூரிலிருந்து மினி லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கடத்திய குற்றத்திற்காக சத்யராஜ் மற்றும் ரமேஷை கைது செய்துள்ளனர். அதன் பின் அவர்களிடம் இருந்த 3 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களையும், மினி லாரியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.