மூதாட்டிடம் தங்க நகையை பறித்து சென்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலையூர்காடு பகுதியில் மாதம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் உள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென அங்கு 2 மர்ம நபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து தொப்பூர் காவல் நிலையத்தில் மாதம்மாள் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் சுரேஷ் மற்றும் அழகேசன் போன்றோரை தங்க நகையை பறித்து சென்ற குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.