கோவை பி.கே. புதூர் பகுதியில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் உத்தரவின் பேரில், சப் – இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது பி.கே. புதூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த வீட்டை சோதனை செய்ததில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுபற்றி வீட்டின் உரிமையாளர் நகுலன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் பாலியல் தொழில் நடப்பதை ஒப்புக்கொண்டு விட்டார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், சரவணன், உன்னிக்குமார் ஆகிய 3 பேரும் நகுலனுக்கு துணையாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பெண் உட்பட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் , பாலியல் தொழிலில் ஈடுபட்ட அப்பெண்ணை பெண்கள் பாதுகாப்பு இல்லத்திலும், மற்ற நால்வரையும் கோவை மத்திய சிறையிலடைத்தனர்.