அமெரிக்காவில் சைக்கிள் பந்தய வீரர்கள் மீது லாரியை கொண்டு மோதிய நபரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் அமெரிக்காவில் உள்ள சோலோ நகரில் நடைபெற்ற சைக்கிள் பந்தய போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த சைக்கிள் பந்தய போட்டி ஆரம்பித்ததும் அனைத்து வீரர்களும் தங்களது சைக்கிளை ஓட்டிக்கொண்டு வேகமாக புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று சைக்கிள் பந்தய வீரர்கள் மீது வேகமாக மோதியுள்ளது. அதில் பலர் தூக்கி வீசப்பட்ட நிலையிலும், சிலர் லாரி சக்கரங்களில் சிக்கிய நிலையிலும் கிடந்துள்ளனர்.
இதையடுத்து லாரியை ஓட்டி வந்த நபர் பதற்றத்தில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் லாரியை கொண்டு வீரர்களை மோதிவிட்டு தப்பி ஓடியவரை காவல்துறையினர் வலைவீசி தேடியுள்ளனர். இந்நிலையில் அந்த லாரி டிரைவர் விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் இரும்பு கடை ஒன்றில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் இரும்பு கடைக்கு சென்று பார்த்த போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளனர். அதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். மேலும் விபத்து குறித்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.