கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை மீறி திருமண ஊர்வலம் சென்ற மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தால் போலீசார் அவர்களை எச்சரித்தும், வழக்கு பதிவு செய்தும் வருகின்றனர்.
இந்தநிலையில் உத்தரவை மீறி உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் திருமண ஊர்வலம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாலையும் கழுத்துமாக ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த மணமகன் மற்றும் மேளதாளங்கள் வாசித்து வந்த 7 பேர் என மொத்தம் 8 பேரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 188ஐ மீறியதற்காக மணமகன் மற்றும் மேளதாளம் வாசிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.