நீதிமன்ற சொத்து வைப்பு அறையில் காணாமல் போன 620 மதுபாட்டில்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தட்டச்சராக தமிழ் செல்வன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில் சையத் ஹாசன் என்பவர் கடந்த 2020-ஆம் ஆண்டு விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 ல் தலைமை எழுத்தாளராக பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இவரிடம் நீதிமன்ற சொத்து வைப்பு அறையின் சாவி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிபதி பூர்ணிமா என்பவர் சொத்து அறையை ஆய்வு செய்த போது, விக்கிரவாண்டி, கண்டமங்கலம் ஆகிய காவல் நிலைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 620 மதுபாட்டில்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இவ்வாறு 75 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் காணாமல் போனதால் தலைமை எழுத்தர் சையத் ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.