புகாரை ஏற்க மறுத்து கடமையை சரியாக செய்யாத காவலர்களை மதுரை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
மதுரை நெல்லை வீதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருபவர் மோகன் என்பவர். இவர் வீடு வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வருகிறார். இவரிடம் தாசில்தார் நகரை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தான் நடத்தும் மருத்துவ நிறுவனத்தில் மோகனை பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறி இரண்டரை லட்சம் கடன் வாங்கினார். அதன்பின் அதே பகுதியை சேர்ந்த சையது என்பவரும் மோகனிடம் வீடு கட்டுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கினார்.
கடன் பெற்ற இருவரிடமும் மோகன் கடன் தொகையை பலமுறை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்து ஹக்கிம், சையது, மதுரை தேவர் நகரை சேர்ந்த செல்லத்துரை ஆகியோர் மோகனை அரிவாளால் கடுமையாக தாக்கி அவரிடம் இருந்த தங்கச் செயின், செக் புத்தகம், ஏடிஎம் கார்டு, வீட்டில் இருந்த 15 சவரன் தங்க நகைகளை திருடி கொண்டு மோகன் ஐயும் கடத்திச் சென்றனர்.
அதன்பின் அவரை சிவகங்கை மாவட்டம் மருதுபாண்டி கண்மாய்க்குள் வைத்து கடுமையாக தாக்கி வெற்றுப் பத்திரம் மற்றும் காசோலையில் கையெழுத்து வாங்கி கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். அதன்பின் பாதிக்கப்பட்ட மோகன் மதுரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். ஆனால் காவல்துறையினர் அவரது புகாரை ஏற்க மறுத்தனர்.
இதுகுறித்து அவர் மதுரை 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஹக்கீம்,சையது, செல்லதுரை மீதும், தன் புகாரை ஏற்காத காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஞானகமாலியேல், பாலமுருகன் ஆகியோர் மீதும் கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர்கள் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கின் விசாரணை ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.