சாத்தான்குளம் இரட்டை கொலையில் சாட்சியமளித்த பெண் காவலருக்கு வீட்டுக்கு பிபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் ரேவதி அங்கு என்ன நடந்தது ? என்று அவர் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார். அதே போல அவரின் கணவர் செய்தியாளர்களிடம் கூறும் போது கூட நடந்தவை பற்றி தானும், தன்னுடைய மனைவியும் எங்கே வேண்டுமானாலும் வந்து சொல்கின்றோம். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், எந்த இடத்திலும் வந்து உண்மையைச் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, கூடுதலாக பெண்காவலருக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தொலைபேசியில் பேசினர். அவருடைய அச்சத்தைப் போக்கும் விதத்தில் பேசிய நீதிபதிகள் பெண் காவலருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததையடுத்து தற்போது சாட்சியமாக வாக்குமூலம் அளித்த பெண் காவலர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இரண்டு காவலர்கள் பாதுகாப்பு வழங்குகிறார்கள். பெண் காவலரின் பாதுகாப்பை உறுதி செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.