விருதுநகர் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை வார்டிலிருந்து தப்பி சென்ற இளைஞரை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்தனர்.
விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்த 26 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்னர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மதியம் அந்த இளைஞர் கொரோனா வார்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி சென்றார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த நபரை தேடி சென்ற காவல்துறையினர் அவர் வீட்டில் இருப்பதை உறுதி செய்தனர்.
பின்னர் வீட்டுக்குச் சென்று அவரை மீட்டு மீண்டும் ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொரோனா வார்டில் சேர்த்தனர்.. அரசு மருத்துவமனையில் கொடுக்கப்படும் சாப்பாடு சரியாக இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறியதாக அந்த இளைஞர் காவல் துறையினரிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.