மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் என்ற அரசு அலுவலர், தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக இரு பெண்கள் மிரட்டிவருகின்றனர் என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் பெண்களுடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறிப்பதை சில கும்பல் தொழிலாக வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
அரசியல்வாதிகள் மிரட்டப்பட்டு கோடிக்கணக்கான பணத்தை கும்பல் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். அதன் ஒரு பகுதியாக, பிரபல செய்தி நிறுவனமான சாஞ்சி லோக்சுவாமியின் அலுவலகத்தில் இன்று காவல் துறையினர் சோதனை செய்தனர். பின்னர், அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
சாஞ்சி லோக்சுவாமியின் உரிமையாளர் சோனி, பல அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்களை வைத்திருப்பதாக தகவல் வெளியானதையடுத்து சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அலுவலகத்தில் எதுவும் சிக்கவில்லை என காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையினர், செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.