மது குடித்து விட்டு போலீஸ்காரரிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பி இருவரையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் ரவி மற்றும் புகழேந்தி என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் மது அருந்தி விட்டு சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரரிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த ரவி அவரை தட்டிக் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சகோதரர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர்.
அப்போது கார்த்திக் சகோதரர்கள் இருவரையும் வழிமறித்து தான் கொண்டு சென்ற அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் சகோதரர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் கார்த்திக்கை வலை வீசி தேடி வருகின்றனர்.