திருமண விழாவிற்கு சென்று விட்டு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய தம்பதியினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 50 இடங்களில் காவல்துறையினர் தற்காலிகமாக சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் போலீஸ் சூப்பிரண்டு கடலூர் அண்ணா பாலம் அருகில் உள்ள சிக்னல் பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, ஒரு கார் சிதம்பரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்றுள்ளது. இந்த காரில் ஐந்து பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அந்த காரை வழிமறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது, காரில் பயணித்த ஒருவர் தனது மனைவியின் கண் பரிசோதனைக்காக புதுச்சேரியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் நகை, பட்டு சேலை அணிந்திருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரில் பயணித்தவர்கள் சிதம்பரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் தவளகுப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த காரை பறிமுதல் செய்து அதில் பயணித்த 3 பேரை இறக்கிவிட்டு அங்கிருந்து செல்லுமாறு திருப்பி அனுப்பி விட்டனர். அதன் பின் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக கூறிய தம்பதிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒரு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் ஆம்புலன்ஸ் சிறிது தூரம் சென்ற பிறகு தாங்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று கூறி அதிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.