போலீஸ் வாகனத்தை கடத்தி சென்ற வாலிபர் லாரியில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் இருக்கும் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து நெருக்கடி குறித்து தினேஷ் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில் போலீஸ் வாகனத்தின் டிரைவரான ராஜ குரு என்பவர் சாவியை வாகனத்திலேயே வைத்து விட்டு அருகில் இருக்கும் சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து டிரைவர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது போலீஸ் வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் வாகனத்தை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் திருப்பூர் மாநகரம் முழுவதும் சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருப்பூர் நோக்கி சென்ற லாரி மோதி போலீஸ் வாகனம் ஒன்று பெரியபாளையம் பகுதியின் நடுரோட்டில் கவிழ்ந்து கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி விரைந்து சென்ற ஊத்துக்குளி காவல்துறையினர் காயமடைந்து சாலையில் கிடந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் பகுதியில் வசித்து வரும் விஜய் என்பதும், ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் குடிபோதையில் இருந்த விஜய் போலீஸ் வாகனத்தை கடத்தி சென்றுள்ளார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காயமடைந்த விஜயை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.