ஊரடங்கு விதிமுறைகளை மீறி ராமேஸ்வரத்திற்கு வேனில் சென்ற சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அரசின் உத்தரவின் படி அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரத்திற்கு பெருநாழி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் வேனில் சென்றுள்ளனர். இவர்கள் கடலில் நீராடிவிட்டு முடி காணிக்கை செலுத்திய பிறகு கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்துள்ளனர்.
அதன் பின் தாங்கள் வந்த வேனிலேயே சொந்த ஊர் திரும்பி உள்ளனர். இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அந்த வேனை நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் அனுமதி இல்லாமல் வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 10 பேருடன் வந்த வேன் டிரைவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்ததோடு, அந்த சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.