மலை கிளி குஞ்சுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக ஐவரை போலீசார் கைது செய்ததோடு, கிளி குஞ்சுகளையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவும், சந்தைகளிலும் மலைப் பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் என்பவரது தலைமையில் சந்தைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் சில நாட்களே ஆன மலை கிளிகளின் குஞ்சுகள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து ராயபுரம் பகுதியில் வசிக்கும் முகமது ரமலி என்ற அக்குபஞ்சர் டாக்டரின் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு மலை கிளி குஞ்சுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் விசாரணையில் இம்மலை குஞ்சுகளை மொத்த விற்பனையாளர்கள் மலையிலிருந்து எடுத்துவந்து சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒரு ஜோடி ரூபாய் 2000 வீதம் விற்றது தெரியவந்ததுள்ளது. மேலும் இந்த கிளி குஞ்சானது சந்தைகளிலும் ஆன்லைன் மூலமும் ஒரு ஜோடி ரூபாய் 4 ஆயிரம் வீதம் விற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை குஞ்சுகளை விற்ற குற்றத்திற்காக அக்குபஞ்சர் டாக்டர் முகமது ரமலி, முத்துச்செல்வம், தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், பாரிமுனையில் வசித்து வந்த கார்த்திக், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்துவந்த ஜெகன் ஆகிய ஐவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதோடு அவர்களிடமிருந்து 53 மழை கிளி குஞ்சுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறும்பொழுது, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி 1972ஆம் ஆண்டு முதல் மலை கிளிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த கிளிகள் டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை குஞ்சுகள் பொரிக்கும். இந்நிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய மலை கிளி குஞ்சுகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளனர். ஆனால் வனத்துறையினர் கைப்பற்றினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளனர்.