பண்ணை வீட்டை சுற்றி வளைத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர்.
பிரேசில் நாட்டில் உள்ள மினஸ் கிரெய்ன் மாகாணத்தில் வர்ஜிஹா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள சில வங்கிகளில் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி கொள்ளையில் ஈடுபட இருப்பதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்துள்ளது. மேலும் வர்ஜிஹா பகுதியில் உள்ள இரண்டு பண்ணை வீடுகளில் சுமார் 50 போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
அப்பொழுது இரண்டு பண்ணை வீடுகளிலும் பயங்கர ஆயுதங்களுடன் மொத்தம் 25 கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் பண்ணை வீடுகளை சுற்றி வளைத்துள்ளனர். இது குறித்து அறிந்த கொள்ளையர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியுள்ளனர். இதனால் போலீசாரும் அவர்களை பதிலுக்கு தாக்கியுள்ளனர்.
இந்த இருதரப்பு மோதலில் முதல் பண்ணை வீட்டில் உள்ள 18 கொள்ளையர்களும் இரண்டாவது வீட்டில் இருந்த 7 கொள்ளையர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக கொள்ளையர்களிடம் இருந்து பயங்கர சக்தி வாய்ந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்கள் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களின் சதிச்செயல் முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.