அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாப்படுகை பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது மாப்படுகை அண்ணாசாலை அருகே சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியே வந்த சரக்கு வேன் ஒன்றை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் காவிரி ஆற்றிலிருந்து மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வேனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வேன் ஓட்டுனர் சோழம்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்(37)மற்றும் வேன் உரிமையாளர் மாப்படுகை அண்ணா சாலை அருகில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம்(45) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.