புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ”என்ஆர்” காங்கிரஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு எந்த வித உதவியும் முதலமைச்சர் செய்து தரவில்லை என தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கிருந்தார்கள.
கடந்த இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பாக இந்த போராட்டம் என்பது வலுத்து வருகின்றது. முதலமைச்சருக்கு எதிராகவும் பாஜகவினர் ”முதலமைச்சர் ராஜினாமா” செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கூட வலியுறுத்தினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து NR காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் அவர்களுடன் சென்று முறையிட்டனர்.
கூட்டணியில் இருந்து கொண்டே, இதுபோன்று முதலமைச்சரை விமர்சனம் செய்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. உடனடியாக பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனியாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வகையிலே குற்றம் சாட்டியிருந்தார்கள்.
இந்த நிலையிலே சபாநாயகர் உடன் கலந்து பேசி இது குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என்று அப்போது அறிவித்திருந்தார்கள். அந்த நிலையில் சபாநாயகர் இன்றைக்கு தான் ஊருக்கு வந்திருந்தார். உடனடியாக சபாநாயகரை NR காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களும் சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு பாஜக கட்சியினுடைய சட்டமன்ற கட்சி தலைவரும், உள்துறை அமைச்சரும் சபாநாயகர் செல்வத்துடன் பேசி வருகிறார்கள்.
எனவே இந்த பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து சமாதானம் செய்து வைக்கும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்டு வருகிறார். ஆகவே இருதரப்பினருக்குமான பிரச்சனைகள் இந்த கூட்டத்திலே பேசி தீர்க்கப்படும் என தெரிகிறது.