Categories
பல்சுவை

அரசியலில் ராகுல்காந்தி கடந்து வந்த பாதை…!!

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும் நம்பிக்கை ஒளியாகவும் பார்க்கப்படும் ராகுல் காந்தி நேரு குடும்பத்தில் பிறந்தவர் என்ற அங்கீகாரத்துடன் அரசியலின் படிப்படியாக வளர்ந்து வந்தவர்.தந்தை ராஜீவ் காந்தி இறந்த பிறகு கட்சியில் ஏற்பட்ட வெற்றிடத்தை இவரால்தான் நிரப்ப முடியும் என்றும் பெரும்பாலான காங்கிரஸார் நம்பும் அளவுக்கு செல்வாக்கு பெற்ற தலைவராக உருவெடுத்து இருக்கிறார் ராகுல் காந்தி. ஏழைகளின் வீடுகளுக்கே சென்று உணவருந்துவது, விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவது போன்ற ராகுல் காந்தியின் தனித்துவமான அரசியல் நடவடிக்கைகள் ஒருபுறம் விமர்சனத்திற்கு உள்ளான போதும், தேசிய அளவில் அவருக்கு விளம்பர வெளிச்சத்தை தருவதற்கும் அவையே காரணமாக அமைந்தன.

2004 ஆம் ஆண்டு தனது தந்தையின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் நேரடி அரசியல் களத்திற்கு வந்த ராகுல் காந்தி சில ஆண்டுகளில் தொகுதிகளை மட்டுமே கவனித்து வந்தார். 2007ஆம் ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ராகுல் காந்தி முன்னின்று பரப்புரை மேற்கொண்ட போது 22 தொகுதிகளிலையே காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. அதே ஆண்டில் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் ராகுல்காந்தி நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நேர்காணல் நடத்தி சிந்தனையாளர் குழுவை உருவாக்கியது அவருக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தன.

2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கிய வேளையில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த வேண்டும் என்று கட்சியின் முக்கிய தலைவர்களில் குரல் கொடுக்கத் தொடங்கினர. அவர்களின் எண்ணம் நிறைவேறா விட்டால் தன்னை தகுதி வாய்ந்த தலைவராக அடையாளப்படுத்திக்கொள்ள அந்த தேர்தல் ராகுல் காந்திக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆறே வாரங்களில் நாடு முழுவதும் 125 பொதுக் கூட்டங்களில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். உத்தர பிரதேசத்தில் மட்டும் 21 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. ஆனால் 2012ம் ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ராகுல் தலைமையிலான பரப்புரைக்கு எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதியுடன் இந்து தீவிரவாதம் பற்றி உரையாடல் நடத்தியதாக வெளியான விவகாரம் லோக்பால் அமைப்பு மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது என்று பேசியது என அவ்வப்போது கண்டனங்களுக்கு ஆளான போதும் பெரிய அளவிலான சர்ச்சைகளில் சிக்கியதில்லை. இந்த சூழலில் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தேசிய காங்கிரஸின் துணைத் தலைவராக ராகுல் பொறுப்பேற்றார். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பொறுப்புகள் அவரை தேடி வந்த நிலையிலும் அவர் அதனை ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது. 2013ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியைக் காப்பாற்ற வகையிலான அவசரச் சட்டத்தை கொண்டுவந்தபோது அதனை தடுத்து நிறுத்தியவர் ராகுல் காந்தி.

தான் சார்ந்த உள்ள காங்கிரஸ் அரசின் அவசர சட்டத்தை முட்டாள்தனமானது கிழித்து எறிய வேண்டியது என வெளிப்படையாக ராகுல்காந்தி பேசியது அவரது அரசியல் வாழ்வில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது மானிய விலையில் ஆண்டுக்கு 9 சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி பன்னிரண்டாக அதிகரிக்க ராகுல்காந்தி குரல் கொடுத்தார். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பரப்புரையை ராகுல்காந்தி முன்னின்று நடத்திய போதிலும் வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம் என்ற போதிலும் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி செயல்படும் விதமே கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பது நிதர்சனம்.

Categories

Tech |